• முகப்பு
  • செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக்: பிரான்ஸ் வீரர் தங்கப்பதக்கம்

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 12.5 கிலோ மீற்றர் தூரப் பனிச்சறுக்கு போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கடே தங்கப்பதக்கம் வென்றார். சுவீடன் வீரர் செபாஸ்டியன் சாமுவேல்சன் வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனி வீரர் பெனடிக்ட் டோல் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இதன் பெண்களுக்கான 10 கிலோ மீற்றர் தூரப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை லாரா டாலெமியர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சுலோவாக்கியா வீராங்கனை அனஸ்டாசியா குஸ்மினா வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை அனைஸ் பெஸ்கான்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

பெண்களுக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1500 மீற்றர் தூர பந்தயத்தில் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பனியில் வேகமாக சென்று அசத்திய நெதர்லாந்து வீராங்கனை இரீன் வுஸ்ட் தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை மிஹோ தகாஜி வெள்ளிப்பதக்கமும், நெதர்லாந்து வீராங்கனை மாரிட் லீன்ஸ்ட்ரா வெண்கலப்பதக்கமும் வென்றார்கள்.