• முகப்பு
  • இந்திய செய்திகள்

முனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் – நாஞ்சில் சம்பத் கிண்டல்!

டி.டி.தினகரனுக்கும், அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை. அவர் ஒரு அரசியல் குற்றவாளி. தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தன்னுடன் இருப்பவர்கள் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காக தனக்கு கிடைக்காத பதவியை தன்னுடன் இருப்பவர்களுக்கு தருவதாக கூறுகிறார். அது நடக்காத ஒன்று. வாயில் வடை சுடுகிறார் தினகரன். அவருடன் இருக்கும் 4 பேரை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் அவர் கூறலாம் என்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் முனுசாமியும், அமைச்சர் ஜெயக்குமாரும் கூறினர்.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் அணியின் நாஞ்சில் சம்பத்:-

டி.டி.வி.தினகரன் நித்தமும் மக்களை சந்திக்கிற தலைவர். மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பில்லாத இவர்கள், வெந்ததை தின்று வாயில் வந்ததை பேசுகிறார்கள். டி.டி.வி. தினகரனுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று ஒரு அடி முட்டாள் கூட சொல்ல மாட்டான். ஆனால் கே.பி.முனுசாமி சொல்கிறார் என்றால் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்க வேண்டியவர். ஜெயலலிதாவின் உதவியாளராக 3 வருடம், கழகத்தின் அமைப்புச் செயலாளராக, பேரவைச் செயலாளராக, பொருளாளராகவும் இருந்தவர் தினகரன். பெரியகுளம் மக்களவை தொகுதியில் 5 ஆண்டுகாலம் உறுப்பினராக, 6 ஆண்டு காலம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் தினகரன். அவருக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று முனுசாமி சொல்லுகிறார் என்றால், முனுசாமி இருக்க வேண்டிய இடம் கீழ்ப்பாக்கம்.

18 எம்எல்ஏக்களில் ஒருவரை முதல் அமைச்சராக்குங்கள், 6 பேர் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னது, அநியாயம் செய்தவர்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சி. துரோகம் செய்தவர்களுக்கு கொடுத்திருக்கிற பாடம். எனக்கு அந்தப் பதவி தேவையில்லை. நம்பிக்கை துரோகமும் நயவஞ்சகமும் சூழ்ந்த காலக்கட்டத்தில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் 18 பேர் உறுதியாக நின்றார்கள். அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக்குங்கள். எனக்கு தேவையில்லை என்று சொல்வதன் மூலம் திராவிட இயக்க வரலாறு மீண்டும் திரும்புகிறது.

தன்னைத் தேடி முதல் அமைச்சர் பதவி வந்தபோது சர்.பி.டி.தியாகராயர், ஜவஹர்லால் நேருவும், ஜவஹர்லால் நேருவின் சீடர்களும் என்னை இளித்தும், பழித்தும் பேசுகிற காலக்கட்டத்தில் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய சகாவுக்கு கொடுங்கள் என்று அன்றைக்கு சொல்லி டாக்டர் சுப்பராயன் முதல் அமைச்சர் ஆனார் என்பது வரலாறு. சர்.பி.டி.தியாகராயர் இடத்தில் இருந்த நாகரீகம், பண்பாடு திராவிட இயக்க அரசியலில் நாங்கள் திராவிட தலைவன் என்று கொண்டாடுகிற தினகரனிடத்தில் இன்று வந்திருக்கிறது. அப்படி சொல்லுகிற அவருடைய பெருந்தன்மைக்கு முன்னால் முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் கூழாங்கற்களாகி கிடக்கிறார்கள் என்றார்.