• முகப்பு
  • செய்திகள்

வெற்றியின் இரகசியம்: அம்பலப்படுத்திய கோஹ்லி

தென்னாபிரிக்க அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் தொடரை 5:1 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி கொள்வதே தமது இலக்கு என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4:1 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி தொடரை வெற்றி கொண்டிருந்தது. அணியின் கூட்டு முயற்சி ஊடாகவே தென்னாபிரிக்க மண்ணில் இந்த சாதனையை நிலைநாட்ட முடிந்ததாகவும் விராட் கோஹ்லி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தொடரின் 5 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை பெற்றிருந்தது.

275 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 42 தசம் 2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் இந்திய அணிசார்பில் 115 ஓட்டங்களைப் பெற்ற ரோஹித் ஷர்மா போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரின் ஆறாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் சென்சூரியனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.